Friday, December 16, 2011

ஊழ்……………














இன்னும்
ஒருமுறையேனும்
மறக்கவும் மன்னிக்கவும்
முயற்சித்திருக்கலாம்
இல்லிக்குடமாய்
மனம் இருந்திருந்தால்………………

ஒட்டுப் போட்ட
ஞாபகங்கள் கூட
ஒட்டிக் கொண்டு
சாக்காடு வரை
வந்து சேரும்
சாத்தியங்கள்
இருக்கும் போது…………………
மறத்தலில் மன்னிப்பையும்
மன்னிப்பில் மறத்தலையும்
ஒலித்துக்கொள்ள
சந்தர்ப்பங்கள் ஏது?

மரணங்களுக்கப்பால்
ஒரு வேளை
மறக்கலாம்….
மன்னிக்கலாம்…
இல்லாமலும் போகலாம்……..


- தினேசுவரி

Saturday, November 19, 2011

தேநீர் மிச்சங்களில் சில எச்சங்கள்



சில

இறுக்கங்களில்

தளர்க்க நினைத்தும்

அகப்படாத

என் மனப்

போராட்டங்களை

அடக்க முயற்சித்தேன்

தேநீர் விழுங்கலில்...

ஜன நாயகம்

என்ற பல நாடகங்களில்

இதுவும் ஒரு

போர்வைப் போலும்.....

போர்த்திக் கொள்ளாமலே

வியர்த்தது...

ஆரம்பமே

தொழில் தொடங்கி

கல்வியில் நிற்க..

உன் முதுகலையும்

என் இளங்கலையும்

முரண்பாடுகளில்

பிடித்தது பிடிக்காதது

அரசியல்

மார்க்கீசம்

கடவுள் என

உன் கொள்கைப் பரப்புகளை

மலையாய்

பேசி முடித்து

துளியாய் என்னையும்

கேட்டு வைத்தாய்.....

சகஜமாய்

பேச முற்பட்டு

முடியாத பட்சத்தில்

சிறு புன்னகைக்குள்

ஒழிந்து கொண்டேன்.....

தேநீர் மிச்சங்களில்

நம் விடைப் பெறுதலும்

சில வாரங்களில்

‘ பெண் பிடிக்கவில்லை ’

என்ற உன் தகவலும்.....

மீண்டுமொரு

ஜனநாயகம்

மற்றொரு கோப்பைத்

தேநீரோடு.....

- தினேசுவரி

Wednesday, June 8, 2011


சில காரணங்கள்………….

மலர்களாய்

பெண்களை வர்ணிப்பதில்

ஆண்களுக்கு என்றும்

சலிப்புத் தட்டியதில்லை…

சருகாகவும்

உதிரவும்

பெண்கள் தயாராக

எப்போதும் இருப்பதால்………….

Friday, January 1, 2010

விழுங்கப்பட்ட வாழ்வு




கலாச்சாரத்திற்கு
பிறப்பிக்கப் பட்டதால்
இன்னும்
வாழ்ந்து கொண்டுதான்
இருக்கிறோம்
ஒரு கூரைக் கீழ்
நானும் நீயும்

நான் சொல்லி
நீ கேட்க
இது என்ன
ஜெனநாயகமா ?
குடும்பம்....!!!
அதனால்
நீ சொல்லிக் கொண்டே
இருக்கிறாய்.
நான் எதையும்
கேட்பதில்லை....!!!

மூக்கணாங் கயிறுக்கும்
மூனு முடிச்சிக்கும்
ஒற்றுமை உனக்கு
தெரிகிறது
வித்தியாசம்தான்
எனக்கு தெரிவதில்லை.....

Sunday, October 11, 2009

காகிதங்களும் நானும்....



காலங்களுக்கேற்ப
காகிதங்களுடனான
என் காதல்
மாறிய காலம்
அது......

மழைக் காலங்களில்
கப்பல்களாகவும்.....
காற்றடிக்கும்
நேரங்களில்
பட்டங்களாகவும்...
என் கோபங்களில்
குப்பைகளாகவும்
மகிழ்ச்சியில்
விமானங்களாகவும்
காகிதங்கள்
நிறம் மாறிக் கொண்டே....

இன்று
நான்
வெறும்
நானாகவே .....

காகிதங்களும்
காகிதங்களாகவே.....

கடக்காத காலங்கள்...




புத்தக இடுக்கில்

மயில் இறகுகள்

வண்ணங்கள்

நிறைந்த பால்யத்தில்....

வளர்வதாகச்

சொல்லி

கதை வளர்த்து

கொண்டோம்

கதை கதையாய்.....

ஒரு குவளை

தண்ணீர் ஊற்றி

ஒரே பூப் பூத்த

இரகசியத்தை

வாசங்களாய்

நிரப்பிக் கொண்டோம்

மொட்டுக்களில்....

மனிதனின்

புறக்கணிப்பு

தெரியும் வயது

போலும்

ஓணாவிடம்

மட்டுமே சலிக்காமல்

மணிக் கேட்டு

கொண்டோம்....

பல முகங்களில்

நிலைத்திருந்தாலும்

எல்லாருடைய

அப்பாவையும்

முருகப்பூவாகவே

அடையாளங்கண்டு

கொண்டோம்.....

திரி திரி

பந்தங்களில்

வெளிச்சங்களை

திரும்பிப் பார்க்கும்

போதெல்லாம்

‘கொட்டு’க்களையும்

சேர்ப்பித்துக்

கொண்டோம்....

கடந்து போயும்

இன்னும்

கடந்துக்

கொண்டிருக்கிறது

பால்யம்

புத்தக இடுக்கில்...

பூக்களில்...

மணி கேட்போரில்...

அப்பாவின் பெயரில்..

திரும்பிப் பார்க்கும்

ஒவ்வொரு

கணத்தில்........

Sunday, September 20, 2009

வாழும் பூக்கள்


சில பூக்களுக்குள்
பல வேளை
நான் மடிந்து போகிறேன்...
அழகில், மணத்தில்,
உதிர்வில்,
மரண சாசனங்களில்.......

உடைத்தெழாமல் என்
குரல் மறுக்கப்படும்
போதும்....
மறைக்கப்படும்
போதும்
இது நடந்தே
விடுகிறது.....
பல முறை
நான் தடுத்தும்....

ஏனெனில்
இறுக்கங்களில்
தளர்ந்து வாழ
கற்றுக் கொடுக்கிறது
பூக்கள்....

பிறருக்காக மணம் வீசி
மலரும் புன்னகையோடே
மரித்துப் போக
நானும் மலர்ந்து
கொண்டிருக்கிறேன்......